| தலச்சிறப்பு | 
 விளா மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலம் 'விளநகர்' என்று அழைக்கப்படுகிறது. அருள்வித்தன் என்னும் அந்தணர் இறைவனுக்கு மலர் மாலையை எடுத்துக் கொண்டு வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க, அவருக்கு இறைவன் துறையை காட்சி அருளியதால் மூலவர் 'துறை காட்டும் வள்ளலார்' என்று அழைக்கப்படுகிறார். 
மூலவர் 'துறை காட்டும் வள்ளலார்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'வேயுறு தோளியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். 
   கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, அருணாசலேஸ்வரர், நால்வர், மகாலட்சுமி, பைரவர், சனி பகவான், சூரியன், நவக்கிரகங்கள் முதலானோர் தரிசனம் தருகின்றனர். 
சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தனக்குக் கரையேற ஒரு துறை காட்டுவார் யாரோ? என்று நினைக்க, அப்போது ஒரு வேடன் வந்து அவருக்கு இத்துறை காட்டி மறைந்தான். "வேடனாக வந்தது இறைவனே" என்று உணர்ந்து பதிகம் பாடினார் சம்பந்தர். 
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 
 |